ஊர் வாய்
வாயாடிச் செருக்கி அவ
வக்கீலுக்குப் படிக்கிறாளாம்!
வடிச்சு கொட்டப் போற கழுதை
படிச்சு என்ன கிழிக்கப் போறா?
கோயிலுக்குப் போக மாட்டா!
கோலங்கூட போட மாட்டா!
தீட்டு பட்ட நேரத்திலும்
தூரம் தள்ளி இருக்கமாட்டா!
பொண்ணா லட்சணமா
பொறுமையா பேச மாட்டா!
அச்சம் மடம் நாணத்தோட
அடக்கமா சிரிக்க மாட்டா!
மூத்தவக பெரியவக
முறையுள்ள மாமனுங்க
கிண்டல் கேலி பேசிப்புட்டா
ரெண்டில் ஒன்னு பாத்துடுவா!
சீமைத்துணி உடுத்துறா
சீர்திருத்தம் பேசுறா!
நேரங்கெட்ட நேரத்துல
ஊருவந்து சேருறா!
இப்படியே இருந்தாக்கா
இவளை எவன் கட்டிக்குவான்?
எனக்கென்ன தோணுதுன்னா
எவனையாச்சும் வெச்சிருப்பா!
அப்பன்காரன் செவப்பு சட்டை
அவங்கொடுத்த தைரியந்தான்
போராட்டம் கூட்டத்துக்கும்
பொண்ணையும் கூட்டிப் போறான்!
காலங்கெட்டு கெடக்குதுங்க
கலி முத்திப் போச்சுதுங்க
ஆயிரந்தான் இருந்தாலும்
ஆணும் பொண்ணும் சரிசமமா?
என்னென்னவோ சேதி சொன்னா
எல்லாமும் சரிதாங்க!
பொட்டச்சி பேச்சை கேட்டு
பொறுத்துக்கிட்டா ஆம்பளையா?
இருபத்தொன்னாம் நூற்றாண்டிலும்
இப்படித்தான் ஊர் பேச்சு!- இந்த
ஆணாதிக்கம் மாத்தலையே
அம்பது வருஷ ஆட்சி!
வரத.வசந்தராஜன்
நன்னிலம்.