Tuesday, September 8, 2020

புதிய கல்வி கொள்கை

 

கல்வி கொள்கையா? இது காவிக் கொள்கையா?
ஏழை சாதிக்கு இனி கல்வி இல்லையா?

பால்குடியை மறக்கும் முன்னே
பள்ளிக்கூடம் வரணுமா?
ஆய்கழுவப் பழகும் கையில்
அரிச்சுவடி தரணுமா?
மூன்று வகுப்பு தாண்டும் போது
பொதுத் தேர்வு வைப்பதா?
கண்விழித்துப் பார்க்கும் போது
இமை இரண்டை தைப்பதா? (கல்வி கொள்கையா)

தாய் மொழியை தள்ளிவைத்து
இந்தியைத் திணிப்பதா?
இறந்து போன சமஸ்கிருதம்
இவர்களுக்கு இனிப்பதா?
மூன்று மொழி சுமையேற்றி
பிஞ்சுகளை வதைப்பதா?
மதிப் பெண்ணை இலக்காக்கி
தனித்திறனை சிதைப்பதா? (கல்வி கொள்கையா)

மதங்கள் சொல்லும் மடத்தனத்தை
பாடங்களில் நுழைப்பதா?
அறிவியலை தவிக்க விட்டு
ஆன்மீகம் தழைப்பதா?
பொய்யும் புரட்டும் சேர்த்தெழுதி
சரித்திரத்தை திரிப்பதா?
புராணப் புளுகு மூட்டைகளை
பிஞ்சு முதுகு சுமப்பதா? (கல்வி கொள்கையா)

அப்பன் பாட்டன் செய்த தொழிலை
பகுதி நேரம் பார்ப்பதா?
அன்று ஒழிந்த குலக்கல்வி
இன்று வந்து சேர்ப்பதா?
சமூக நீதி தழைக்கத் தானே
சாதி இட ஒதுக்கீடு!
சனாதானம் வளரத் தானே
சங்கி செய்யும் குறுக்கீடு! (கல்வி கொள்கையா)

கலை அறிவியல் பாடத்துக்கும்
கடின நுழைவுத் தேர்வா?
வேலை யின்மை பிரச்சினைக்கு
குறுக்கு வழியில் தீர்வா?
சந்தை போல கல்வி முறையை
பார்க்குதடா கார்ப்ப ரேட்டு
நொந்த ஏழை சனங்களுக்கு
கையிலேது கரன்சி கட்டு? (கல்வி கொள்கையா)

சங்கம் வைத்துப் போராடும்
உரிமையினை  மறுப்பதா?
அரசு செய்யும் அடக்குமுறை
அடிமை போல பொறுப்பதா?
குரல் வளையை நெறித்திடத் தான்
காவிக் கூட்ட கூப்பாடு!
பொம்மை போல தலையை ஆட்ட
மாற்றி வைக்க ஏற்பாடு! (கல்வி கொள்கையா)

அடுக்களையில் மீண்டும் பெண்ணை
அடைக்கிறதா உயர்கல்வி?
வகுப்பறையில் சரி சமமாய்
கிடைக்கிறதா பெண்கல்வி?
காவிக் கூட்டம் தலையிடத்தான்
லோக்கல் ஹீரோ திட்டமா?
கல்வித் திட்டம் வகுப்பதென்ன
ஆர்எஸ்எஸ் இஷ்டமா? (கல்வி கொள்கையா)
  -வரத.வசந்தராஜன்
நன்னிலம்

பாஜகவை நம்பி போனா

 

பருந்து முட்டையை பாதுகாத்து
கோழிக்கென்ன லாபம்?
பாஜகவை நம்பி போனா
வாழ்க்கை கெட்டு போகும்?

ராமனுக்கு கோவில் கட்ட
கல்லைத் தூக்க சொல்லும்
சமூகநீதி பேச்செடுத்தா
கல்லெறிஞ்சு கொல்லும்!
இந்துவாக இணைய சொல்லி
இந்தி மொழியில் பேசும்!
சாதிச் சண்டை நடக்கும் போது
மௌன விரதம் இருக்கும்!  (பருந்து)

ஐபிஎஸ் வேலை விட்டு
ஆடு மேய்க்க சொல்லும்!
ஆமாஞ்சாமி போடும் வரைக்கும்
அஞ்சு பத்து தள்ளும்!
கோயபல்ஸை நகல் எடுத்து
மாரி தாஸா ஆக்கும்!
கொட்டியளந்த பொய் கதைக்கு
நாடே வாயை பொளக்கும்! (பருந்து)

ஆட்டம் போட்ட அத்வானி
அட்ரஸ் எங்க காணல
தேர்தல் முடிஞ்சா ராமனையும்
தேடி வர ஆளில்ல?
'ஜீ'யின்னு சலாம் வெக்கும்
நம்பிடாத தம்பி!
'சீ'யின்னு விரட்டும் போது
வெம்பிடாத தம்பி!          (பருந்து)

பஞ்சாமிர்த புட்டிக் குள்ள
அபினை அடைச்சு வைக்கும்
ஆளில்லாத நேரம் பார்த்து
தாலி அறுத்து விக்கும்!
தனக்குத்தானே குண்டு வீசி
விளம் பரத்தை தேடும்!
அடுத்தவனை பழியைப் போட்டு
கல வரத்தைத் தூண்டும்!     (பருந்து)

மிஸ்டு காலு கொடுத்தாலே
மெம்ப ராக சேர்க்கும்
மன்னிப்பு கடிதம் எழுதி
வாய் வீரம் காட்டும்!
தாமரையை மலர வைக்க
தலை கீழா நிக்கும்! -இந்த
தகிடுதத்தம் புரிய லன்னா
தலை முறையே திக்கும்!     (பருந்து)

-வரத.வசந்தராஜன்
நன்னிலம்

அம்பத்தாறு இஞ்ச்

 

தரையில வாத்தை ம'டக்'குன
ஆளு
தண்ணியில் முதலையை அ'டக்'குன ஆளு...
பொருளாதாரத்தை மு'டக்'குன ஆளு
பொறுத்தது போதும் ப'டக்'குனு கேளு!

அது யாரு அது யாரு? தெரியுமா?
அவர் பேரு சொல்லாம புரியுமா?

அம்பத்தாறு இஞ்சுக்கு
அகலமான நெஞ்சுக்கு
அஞ்சுகாசு அளவுக்கு
மச்சமொன்னு இருக்குதடா மச்சான் -அதானி
கச்சிதமா அளந்து தானே வெச்சான்!
    (அது யாரு )

வாயில சுட்ட வடையில
லாபம் பாக்கும் கடையில
டீ ஆத்துன கப்சா ரொம்ப ஹிட்டாச்சு -உண்மை
தெரிஞ்ச பின்னே ஏழைத்தாயை தொட்டாச்சு!   ‌‌    (அது யாரு )

கலர் கலரா உடையில
மாடல் போல நடையில
மாட்டிகிட்டு போஸ் கொடுக்கும் எளிமையை -பாத்து
பதறுதடா ஜவுளிக் கடை பொம்மையே!          (அது யாரு )

ஏத்தி விட்ட ஏணியை
எட்டி உதைக்கும் பாணிடா
பிள்ளையாரா பிடிச்சாலும் சாணி தான் -அவரு
பிடுங்குனது தேவையில்லா ஆணி தான்!           (அது யாரு )

சிசி டிவி காமிரா
பார்த்துப் புட்டா பாமரா
போனவேலை மறந்து போகும் பாரு -சேர்ந்து
செல்ஃபி எடுக்க சிலையா நிப் பாரு!
                        (அது யாரு )
-வரத.வசந்தராஜன்
  நன்னிலம்

சைவ காதல்

 காரட்டு நெறத்தழகி 

கத்தரிப்பூ சிரிப்பழகி 

சாரட்டு வண்டி பூட்டி வாரேன்டி- உன்னை

சம்மந்தம் பேசத் தான் போறேன்டி!


பூசணிக்காய் முகத்தழகி

புளியம்பிஞ்சு உதட்டழகி 

யோசனைக்கு காரணம் எதுதான்டி- நான் 

யோக்கியந்தான் சந்தேகம் உனக்கேன்டி!


கன்னத்தில் தக்காளி 

கண்ணுக்குள் குடைமிளகாய்

எண்ணத்தில் நிறைஞ்சவளே நீதாண்டி- உன்னை 

எப்படியும் மணமுடிக்கப் போறேன்டி!


பீர்க்கங்காய் கழுத்தழகி 

பீட்ரூட்டு மாரழகி

ஏக்கத்தை தீர்க்கத்தான் வாயேன்டி-  உன் 

இதயத்தில் இடமொன்னு தாயேன்டி! 


வெண்டைக்காய் விரலழகி

வெள்ளரிக்காய் கையழகி 

சண்டைக்கு இழுக்காதே பாவன்டி-நீ 

சாடையில சொல்லிபுட்டா பாய்வேன்டி!


சுரைக்காய் இடுப்பழகி 

சௌசௌ மடிப்பழகி

முறைச்சா நான் என்ன ஆவேன்டி- உன்னை 

மறந்தா மனசுக்குள் சாவேன்டி!


வாழைத்தண்டு காலழகி 

வாய்பிளக்கும் பேரழகி 

ஏழைக்கேத்த எள்ளுருண்டை நீதான்டி- உன்னை

எஜமானி ஆக்கத்தான் போறேன்டி!


-வரத.வசந்தராஜன்

  நன்னிலம்


என்னைப் பெத்த அப்பா

 உசிரா இருக்கும் வரைக்கும் 

அருமை தெரியவில்லை- அவர் 

உருவம் கண்ணுக் குள்ள 

இன்னும் மறைய வில்லை!

விலை யென்ன கேட்காம 

வாங்கிக் கொடுத்த அப்பா- அவர் 

வேதனையைத் தெரிஞ்ச அம்மா 

என்னை அதட்டி வெப்பா!


தீவாளி பொங்கலுக்கு                      துணியெடுக்கப் போனாலும்

தெனக்கூலி தீர்ந்துபோயி வட்டிவாங்கி வந்தாலும் 

ஆளுக்கு ரெண்டுசட்டை 

எடுத்துக் கொடுத்த அப்பா-அவர் 

மேலுக்குப் போட மட்டும் 

பத்து வருஷ ஜிப்பா!         (உசிரா)


எண்ணெய்தேச்சு குளிக்கவைக்க

என்னைபாடு படுத்துவாரு

கண்ணில் சீக்கா விழுந்ததுக்கு கலங்கி அவரு தவிப்பாரு

சைக்கிளு பாரில்சின்ன

சீட்டு வெச்ச அப்பா - என் 

செருப்பில் பதிஞ்ச முள்ளை 

வாயில் கடிச்ச அப்பா!            (உசிரா)


கறிசோறு சமைச்சாலும் 

எலும்பு மட்டும் கடிச்சிகிட்டு

கையால நெறடிப்பாத்து 

கறி எடுத்து நீட்டுவாரு

தொண்டைக்கு போன முள்ளை 

தோண்டி எடுத்த அப்பா -எனக்கு‌

நண்டுகால் கடிக்கும்போது 

எச்சில் பட்டா தப்பா! (உசிரா)


திருவிழா கூட்டத்துல நான்தொலைஞ்சு போவேன்னு

திண்பண்டம் வாங்கித்தந்து 

தோளில்தூக்கி வெப்பாரு 

கோபுரம் என்னைவிட 

ஒசரம் கம்மியப்பா -அந்த 

கோயிலு சாமிதானே 

என்னை பெத்த அப்பா!           (உசிரா)


-வரத.வசந்தராஜன்

நன்னிலம்.


பட்டாசு தொழிற்சாலை விபத்து

 

பயங்கர வெடி விபத்து- அதில்
பலபேர் உயிரிழப்பு
பலமுறை இப்படி காதுல கேட்டு
           பழகிடுச்சு நியூஸு- ஒன்னும்
           பதறலயே மனசு!

எரிந்தது எப்படி தீயறியும்
எதனால் என்பதை யாரறிவார்?

கந்தகத் துக்கும் பேரியத் துக்கும்
நடந்த கைகலப்போ? -இதில்
காப்பீட் டுக்காய் காரியத் துக்கம்
பூணும் சதியிருக்கோ?

ராக்கெட்டு போல உயரே‌ போகும்
ஆலை முதலாளி- பாம்பு
மாத்திரை போலே மண்ணில் கருகும்
கூலித் தொழிலாளி!

கந்தக வாடையில் கனவுகள் திரிக்கும்
கன்னிகள் எத்தனையோ?-வெடிக்
கட்டுகள் எண்ணி கணக்கு படிக்கும்
பிள்ளைகள் எத்தனையோ?

மத்தாப் பூவாய் சிரிக்க நினைத்த
ஏழைகள் கனவெல்லாம்
புஸ்வா னமாய் புகைந்து முடிந்து
போனது ஓர்நொடியில்!

சீனிச் சரமாய் நீளுது இன்னும்
வட்டிக் கடனெல்லாம் -தரைச்
சக்கரம் போல சுற்றிய வாழ்க்கை
சரிந்தது புவிமடியில்!

எத்தனை முறைஅந்த நெருப்பு குடிக்கும்
ஏழைகள் உயிரெல்லாம் -இருள்
கவிழ்ந்து கிடக்கும் குடிசைக் குள்ளே
ஈஒஎப்போ வரும்விடியல்?

வெடி மருந்தோடு வெடி மருந்தாக
சாம்பல் கலக்கிறதே -சனம்
வெந்து மடிந்த வீதியில் மீண்டும்
கட்டடம் முளைக்கிறதே!
            -வ.வசந்தராஜன்
            நன்னிலம்

ஆங்கில மோகம்

அக்கம் பக்கம் வீட்டிலுள்ள
ஆளு யாரு தெரியலே
அமெரிக்காவின் அதிபர் பேரை
பட்டுன்னு சொல்லுது பயபுள்ள!
அரிசி எப்படி வெளையுதுன்னு
அப்பன் காரன் சொல்லல
கல்லா கட்டும் ஏற்பாடுதான்
கான்வென்டு ஸ்கூலுல!

மார்க் வாங்கும் எந்திரமாக
மாணவனை மாத்துது
பணம் காய்க்கும் மரத்தைப் போல
பெத்தவனை பாக்குது
வெளி நாட்டு வேலையின்னு
ஆசை வார்த்தை காட்டுது- கள்ளச் சாராயம் வித்த ஆளை
கல்வித் தந்தை யாக்குது! (அக்கம் பக்கம்)

தாய் மொழியே தெரியவில்லை
ததிங்கினத்தோம் போடுது
ஆங்கி லத்தில் மட்டுமென்ன
அரைகுறையா தேறுது!
அய்யோ பாவம் ஆமைக்குஞ்சு
ஓட்டப்பந்தயம் ஓடுமா?
கட் டெறும்பைக் கடலில்விட்டா
கரைக்குவந்து சேருமா? (அக்கம் பக்கம்)

அரசுப் பள்ளி பிள்ளையைபாரு
அம்மாம்பேச்சு பேசுது
கான் வென்டில் படிச்சபுள்ள
அம்மாஞ்சியா முழிக்குது
நாட்டுக் கோழி வீரியம்பாரு
நரியைக்கூட துரத்துது
சிறகை வெட்டி பருந்துவளர்த்தா
கோழிகூட கொத்துது (அக்கம் பக்கம்)

அம்மா அப்பா கனவுதிணிக்க
பிள்ளை குப்பைக்கோணியா?
அவரைச் செடியில் ஆப்பிள் பழுக்க
ஆசைப் படும்பாணியா?
வெள்ளைக் காரன் மொழியைப்பேச
விரும்புறது தவறில்ல!
வெள்ளைத் தோலும் வேணுமின்னு
வெந்துபோனா சரியில்ல! (அக்கம் பக்கம்)

-வ.வசந்தராஜன்
நன்னிலம்


ஆசாரி(தச்சன்)யின் காதல்

பூவரசோ மாமரமோ -உன்
பூமேனி செம்மரமோ!
மஞ்சனத்தி உன்முகமோ
மணக்கும் சந்தனமோ!

பலமரமும் பாத்துவந்தா
ஒரு மரமும் புடிக்காது- நான்
பாத்தது ஒத்தை மரம்
பளபளக்கும் தேக்கு மரம்!

கட்டில் காலாட்டம்
கட்டழகே நீ கெடச்சே...
பட்டை பழுதும்இல்லே
பக்குவமா நீ சிரிச்சே...


 காத்துல படபடக்கும
சன்னல் கதவாட்டம் -உன்
இமைமூடி திறக்கையில
இதயம் நின்னுதுடிக்குதடி!

கடைசல் போட்டதுபோல்
கச்சிதமா ஒடம்பிருக்கு- உன்
கண்ணுமுழி ரெண்டும் என்னை
துளைபோட்டு கோக்குதடி!

இழைப்புளி இல்லாம
இழைச்ச தேகம் பாத்து- மனசு
பசையேதும் போடாம
பச்சக்குன்னு ஒட்டுதடி!

முக்காலி சடைபோட்டு
முன்னாடி நீநடந்தா- காலு
தெக்கால வடக்கால
திசைமாறி நொடிக்குதடி

சத்திரத்து நிலையைவிட
சாணளவு ஒசந்தவளே- உன்னை
உத்திரத்து தூணைப்போல
உள்ளங்கையில் தாங்குவேன்டி!

மூங்கில் ஆணிபோல
மனசுல பதிஞ்சவளே - நான்
ஏங்கித் தவிக்கிறனே
எப்போவர தாழ் போட?

-வ.வசந்தராஜன்
  நன்னிலம்.


எங்கே கடவுள்?

 கருப்போ சிவப்போ குட்டை‌ நெட்டையோ

கடவுளைத் தேடி அலையுறேன்!

ஆணோ பெண்ணோ அர்த்த நாரியோ

அருவம்தானோ குழம்புறேன்!


கடவுள் இதுவரை தென்படவில்லை

கருவறைக் குள்ளும் கண்படவில்லை

இருக்கு இல்லை என்கிற பேச்சால் 

இறைவன் மனது புண்படவில்லை!

ஊரைக்கூட்டி தேரை இழுக்கும் 

உற்சவத்துக்கும் அவன் வரவில்லை...

உரக்கக்கூவி அழைத்தபோதும் 

இரக்கப்பட்டு இறங்கவுமில்லை... (கருப்போ)


ஏழையின் சிரிப்பில் இருப்பதுமில்லை 

ஏழைகள் யாரும் சிரிப்பதுமில்லை

சிறப்பு தரிசன வரிசையில் நின்றும் 

செருப்பின் கவலை விடுபடவில்லை! 

கோவில்உண்டியில் கோடிகொட்டியும்

கோமான்வீட்டில் குடிவரவில்லை...

சேரியின்கால்கள்‌ தொடாத இடத்தில் 

சிலையின் நிழலும்‌ அடிபடவில்லை...

(கருப்போ)


தூணிலுமில்லை துரும்பிலுமில்லை!

அணுவிலுமில்லை அதனுள்ளுமில்லை!

விஞ்ஞானத்தில் புலப்படவில்லை

அஞ்ஞானத்தில் அகப்படவில்லை!

மனதின் அழுக்கை வெளுப்பதையன்றி 

மதத்தின் நோக்கம் வேறெதுமில்லை...

இன்னொரு மதத்தை வெறுப்பதையன்றி 

இறைவனை அடையும் வழியதிலில்லை... (கருப்போ)


பூசைகள் செய்தார் பார்த்ததுமில்லை

புதுப்பிக்கின்றார் பயனெதுமில்லை

ஆடம்பரமாய் விளக்குகள் கட்டி 

அலப்பறை செய்தும் அங்கேயுமில்லை...

அகன்றக்கொடியை பறக்க விட்டும்

ஆண்டவன் ஏனோ எங்கேயுமில்லை... (கருப்போ)


தேடித் தேடித் தெம்பு மில்லை 

தேடா விட்டால் வம்பு மில்லை 

நம்பித் தொலைத்தால் சங்கடமில்லை

நம்பா விட்டால் சஞ்சல மில்லை

இருப்பைச் சொல்ல சான்றுகள் இல்லை

இல்லை என்பதற் கதுதான் எல்லை! 

(கருப்போ)


விலை மகளின் வேதனை

 ஈனப்பிறவிகள் தந்திரத்தால் 

இருட்டில் இயங்கும் எந்திரம் நான்! 

மானம் பெரிதெனும் மேடைவாய்கள் 

மாலையில் ஜெபிக்கும் மந்திரம் நான்! 

கற்பை உயர்வெனக் கதையில் உரைக்கும் 

தமிழ்க்குடி பெற்ற தலைமகள்‌ நான்!

கருப்பை வழியே பிறந்த நாய்கள் 

கடித்துக் குதறிய விலைமகள் நான்!


வேலை கேட்டுப் போன இடத்தில்

சேலை இழுத்தவர் எத்தனையோ?

மாலை சூட்ட தட்சணை கேட்டால் 

மங்கையர் வாழ்வது எப்படியோ?படித்தக் கடனை கட்டும் முன்னே 

படுக்கை விரித்தவர் எத்தனையோ?

பார்ப்பவர் எல்லாம் பாதகர் என்றால் 

பத்தினி யாவது எப்படியோ? 

(ஈனப்பிறவிகள்)


வறுமை விற்று வயிறு நிறைத்தேன்

உடலை விற்பதாய் ஊர்பேச்சு! 

மாதம் மூன்றுநாள் உழைக்கா துண்பதே 

உறுத்து கிறதுஎன்‌ மனசாட்சி! 

ஆலைக் கரும்பென ஆனதென் வாழ்க்கை 

அனுதினம் பிழிபடும்‌ சக்கை!

சேலை சுமையென எடுத்தெறி ந்தாலும்

இன்னும் மேனியில் வெக்கை! (ஈனப்பிறவிகள்)


புனிதம் பேசும் புண்ணிய வானே 

தழும்புகள் எண்ணிப் பாரும்!

மனிதன் உருவில் திரியும் மிருகம் 

எத்தனை என்பதைக் கூறும்!

தினமும் என்னை துகிலுரி ந்தாரே

ஆடை கொடுப்பவன் எங்கே?

சாதியும் மதமும் சபலத்துக் தில்லை

சமத்துவ மாகுது இங்கே?

            (ஈனப்பிறவிகள்)


இரைப்பை மட்டும் திறந்து வைத்து

கருப்பை கதவை மூடினேன்

கொள்ளி வைக்கவும் பிள்ளை இல்லையே‌

கதியை எண்ணி வாடினேன்!

மரமாய் கிடப்பேன் கட்டில் மேலே 

எத்தனை உருவம் தீண்டும்?

பிணமாய் விழுந்த பின்னா லேனும்

தனியாய் படுக்க வேண்டும்!

         -வசந்தராஜன் 

           நன்னிலம்.


தாயே... மரித்தாயே

 வாடையிலும் கோடையிலும் 

என்னை வளர்த்த ஆத்தா- உன்னை 

பாடையில பாக்கணுமா 

விட்டு எழுந்து வாத்தா!

கவலையெதும் காட்டாம 

என்னை வளர்த்த ஆத்தா- இப்போ 

கலங்கிநின்னு தவிக்கிறனே 

கண்ணு துடைக்க வாத்தா!


நடைவண்டி ஓட்டும்போது 

நான் தடுக்கி விழுந்ததுக்கு

வண்டிசெஞ்ச ஆசாரியை

வசைமாரி பொழிஞ்சவ தான்- இப்போ 

சவவண்டி அலங்கரிச்சு

சந்து பக்கம் நிக்குதம்மா

சனஞ்சாதி நெறைஞ்சிருக்கு 

சத்தம் போட்டு திட்டுவியா!   (வாடையிலும்)


கணக்குப் பாடம் தெரியாம

கையில் அடிச்ச வாத்தியாரை 

கணக்கு வழக்கு இல்லாம 

கரிச்சிக் கொட்டி திரிஞ்சவ தான்- இப்போ 

மாரடிச்சு மாரடிச்சு 

மரத்துப் போன கைகளுக்கு 

மருதாணி வெச்ச கையால் 

மருந்து வைக்க வருவீயா?  (வாடையிலும்)


வாயைக்கட்டி வயித்தைகட்டி

சுருக்குப்பையில் சேர்த்து வெச்சு

வேணுமின்னு கேக்கும் முன்னே

வாய்க்குருசி கொடுத்தவ தான் -இப்போ

வாயைக்கட்டி காலைக்கட்டி 

வாழைமட்டை பத்தி வெச்சு

வாசம் விட்ட தேகத்துக்கு 

வாய்க்கரிசி போடணுமா? 

          (வாடையிலும்)


சொத்தைவிட்டு சொகத்தைவிட்டு 

சொந்த பந்தம் ஏசவிட்டு 

செத்துவிட்ட அப்பன்பெருமை

சொல்லிச் சொல்லி அழுதவதான்- இப்போ

ஒதுக்கிவெச்ச சொந்தமெல்லாம்

ஒசத்திவெச்சு பேசுதம்மா 

நேசம் வெச்ச‌ தாயுனக்கு

நெருப்பு வெக்க ஆனதம்மா! (வாடையிலும்)


-வரத.வசந்தராஜன்

  நன்னிலம்