Thursday, May 28, 2020

இலக்கை நோக்கி

சிங்கத்தின் வாயில் நம் தலையிருக்கு 
சிலந்திக ளோடென்ன வம்பு வழக்கு?
மலைகளை பிளப்பது நம் இலக்கு 
மணல் துகளோடு பேச்செதுக்கு?

புலிகளை வீழ்த்த புறப்பட்ட பின்பு
புள்ளிமான் எதிர்ப்படும் சீண்டாதே!
அம்புகள் வழியில் யோசனை செய்தால்
அதுபோய் குறியினைத் தீண்டாதே!

சூரியக் கிரணங்கள் சுடுகிறதென்று 
கடல்நீர் அழுது கிடப்பதில்லை...
கூரிய ஏர்மூனை கீறுவதாக 
வயல்வெளி உழுதிட மறுப்பதில்லை!

தவளைகள் தமக்குள் முட்டிக்கொண்டால்
எலிகள் நேரத்தைப் பார்த்திருக்கும்!
எலிகளுக் கிடையிலும் சண்டையென்றால் 
பாம்புகள் பகையுடன் காத்திருக்கும்!

பொதுவில் நமக்கொரு எதிரியுண்டு 
போகிற‌ வழியினில் உதிரியுண்டு 
எதிரி யாரெனத் தெளிந்திடுவோம்
உதிரிகள் கூச்சலை ஒதுக்கிடுவோம்!
  

எனது முதல் கவிதை தொகுப்பு





புலம் பெயர்ந்த மனசு

புலம் பெயர்ந்த மனசு

வந்தபோது தெரியாது 
சொந்த ஊரை 
இவ்வளவு தூரத்தில் 
விட்டிருக்கிறோமென...

இட்டிலிக்குள் 
கறி இருப்பதைவிட 
ஆச்சரியம் தான்
ஒரே பெட்டிக்குள் 
நாங்கள் 
ஒட்டிக்கொண்டு வந்த கதை...

பான்பராக் வாயைப்
பரிகசித்த நீங்கள்
பசித்த வயிற்றைப் 
பார்த்திருக்க 
மாட்டீர்கள்...

அடுத்த வேளைக்கு
80லட்சத்தில் 
ஆடையிருந்தால் 
அழுக்கை சுமக்க 
ஆசையா எங்களுக்கு?  

இந்தி வாலாக்கள் 
என ஒதுக்குவீர்கள் 
இந்தப் பிரிவினை 
இன்னுமா நீளுகிறது 
மந்தி வாலாக...

அற்பக்கூலிக்கு 
உழைக்க வந்தவர்களா
உங்கள் 
அரிய வாய்ப்பை 
அபகரித்தது? 

கட்டிட இடிபாட்டில்
பட்ட காயத்தில் 
புரையோடி கிடக்கிறது
உழைப்புச் சுரண்டல்! 

சஞ்சீவி மலையோடு 
பெயர்த்துச்செல்லவா
முடியும்?
என் உடல்தேவைக்கு 
உயிர் சுமக்கும் 
கர்ப்பிணி மனைவியை...

கால்வலிக்குதென 
கைதூக்கச் சொல்லும் 
குழந்தையை 
எந்தக் கரத்தில் 
தூக்குவது 
மூட்டை முடிச்சுகளோடு 
சேர்த்து...

சூட்கேஸ் தூக்கியே 
பழகிய கைகள் 
எங்கள் 
சுமைகளைத் தூக்க 
எப்படி நீளும்? 

மைல் கணக்கில் 
தூரம் பார்த்த எமக்கு 
நாள் கணக்கில் 
நடக்க வேண்டியுள்ளது 
பிழைத்த இடத்திலிருந்து
பிறந்த இடத்திற்கு...

நடந்து நடந்து 
கொப்புளமாகிறது 
பாதங்களிரண்டும்...
பாதணிகளை
அரியாசனத்தில் வைத்த
அறியா சனம் நாங்கள்! 

எப்படியேனும் 
புலம் பெயரட்டும் 
ஆட்சிகள்!

Wednesday, May 27, 2020

வருக வருக

உள்ளுக்குள் உருகிடும் தமிழ்ப்பனியை 
ஊற்றி உறையிடும் தமிழ்ப்பணியை
எவ்விதம் செய்வது தெரியவில்லை
எவ்விடம் சேர்ப்பது புரியவில்லை...

வார்த்தைகள் தினந்தினம் பூக்கிறது 
வாய்ப்புகள் எத்தினம் கேட்கிறது!
ஆயிரம் வாசல் இருக்கிறது -அட தச
திறவுகோல் எங்கோ கிடக்கிறது!

தாய்வழி வந்த மரபல்லவா-இது 
தாய்மொழி தந்த வரமல்லவா? 
வார்த்தைகள் கோர்ப்பது சுகமல்லவா
வாசகன் ரசிப்பது விருதல்லவா? 

பூட்டி வைப்பதில் பலனுமில்லை 
பூட்டுதல் தமிழுக்கு பலனுமில்லை
வருவதை வாரி இறைக்கின்றேன்
தருவது எதுவோ ஏற்கின்றேன்!

இணைய வழியை தேடி நின்றேன்
இணையவழியை தேடி வந்தேன்.

இனி சந்திப்போம் தமிழோடு...