உடலும் வீழும் உயிரும் மாயம்
உள்ளம் மட்டும் ஏற்காது!
ஊரும் பதறும் உறவும் கதறும்
இறவா திருக்கும் நிலையேது?
பெட்டிப் பணத்தை
கட்டி அணைத்தும்
கெட்டி இல்லை உயிரிங்கே!
இளமை மூப்பு
எதுதான் சொல்லும்
இறந்து படுக்கும் நாளெங்கே?
மலமும் சலமும்
வாரும் வழிக்கும்
நிலையில் ஆண்டுகள் கடக்கின்றார்!
திடமாய் திரிந்த
மனிதர் கூட
திடுமென மரித்துக் கிடக்கின்றார்!
தடுக்கி விழுந்தே
இறந்தவருண்டு
தலையடி பட்டும் தப்பிப்பார்!
குண்டைத் தாங்கி
வாழ்ந்தவர் கூட
குண்டூசி குத்தி மரணிப்பார்!
எங்கோ ஓருயிர்
மடிந்தது கேட்டால்
முடிந்தது விதியெனக் கூறிடுவார்!
இறந்தவர் தமக்கு
உரியவர் என்றால்
எமனையும் வெட்டிக் கூறிடுவார்!
மரணம் ஏற்க முடியாமல்
மறுமை என்பதை மனம் ஏற்கும்!
சரணம் இறையெனக் கிடந்தாலும்
கிழமை பார்த்தா உயிர் போகும்?
உயிரின் இருப்பு எதிலென்றால்
துடிப்பில் என்பதே சரியாகும்!
இறப்பு எதிலே இருக்கிறதென்றால்
பிறப்பில் என்பதே பதிலாகும்!
-வரத.வசந்தராஜன்
நன்னிலம்