Monday, July 6, 2020

அண்ணல் அம்பேத்கர்

அண்ணலிடம் ஊற்றெடுக்கும்
அறிவார்ந்த தத்துவங்கள்
கண்ணொளியை இழந்தவரும்
கண்டுணரும் மகத்துவங்கள்
பார்முழுதும் அலைந்தாலும் கிடைக்காது வேறெங்கும்?
பாரதத்தாய் கிரீடத்தில் மின்னுகிற ஒருதங்கம்!

தாழ்த்தப்பட்ட மக்கள் கையில் ஏந்துகிற ஒளிவிளக்கு
வீழ்த்தப்பட்ட ஓரினமே வணங்குகிற தனிக்கிழக்கு!

பார் புகழும் சட்ட மேதை!
பாரிஸ்டர் பட்ட மேதை!
பாமர மக்களின் பிரதி நிதியென
வட்டமேஜை மனதை தொட்ட மேதை!

பஞ்சப் பரம்பரை நெஞ்சத்தில் நீ
யாரும் தூண்டாமல் ஒளிரும் 'மகர'ஜோதி!
பிஞ்சில் நொந்த அனுபவம் தந்தது
பாழும் தீண்டாமை சாக்காடு தகர நீதி!

மனிதருக்குள் சிலபேரை மட்டமென எண்ணியோரை
மநுதர்ம தந்திரத்தை வேதமென பண்ணியோரை
அம்பலப்படுத்த அண்ணல் வந்தார்!

பலநூறு ஆண்டுகளாய் சாதிசொல்லி தாழ்த்தியதை
பல்வேறு படிகளாய் தீண்டாமை வீழ்த்தியதை
அப்புறப்படுத்த சட்டம் தந்தார்!

ஆராய்ந்த நூல்கள் ஆயிரம் இருந்தாலும்
அணியாத நூல்தான் அவரறிவை அளந்தது!
ஞானியாய் பின்னாளில் நாடறிய திகழ்ந்தாலும்
கோணியில் அமரவைத்த கொடுமையும் நடந்தது!

ஏதுமற்ற மக்களுக்கேன் நெருக்கடிகள்?
எத்தனைநாள் பொறுப்பதிந்த நுகத்தடிகள்?- என
எழுப்பிய கேள்வியெல்லாம் சவுக்கடிகள்
என்னபதில் சொல்லும்சாதி கைத்தடிகள்?

பிராமண சத்ரிய வைசியரும்
பஞ்சமரோடு சூத்திரரும்
புழங்கிட வேண்டும் பொதுவீதி- என
புலப்பட உரைத்தார் சமநீதி!

உயர்வெனல் தாழ்த்துதல் அவமதிப்பு
ஒதுக்கிப் பிரிக்கிற அருவருப்பு!
ஒவ்வொரு மனிதனும் ஒரேமதிப்பு
பெறும்வரை சுதந்திரம் புறக்கணிப்பு!

பித்தம் பிடித்தவர் நடத்திடும் வர்ணம்
தத்தம் சாதியை உயர்த்திடும் எண்ணம்‌
முற்றும் தீரவும் நெறியினைக் கண்டார்
புத்தம் சேரவும் வழியினைச் சொன்னார்!

மேல்நாட்டு மார்க்சுக்குப் பிந்தையவர்
தென்னாட்டு பெரியாரின் சிந்தையவர்
நம்நாட்டு அரசமைப்பின் தந்தையவர் - சாதி
கைநாட்டு  வெறியர்களின் விந்தையவர்!

அம்பேத்கர் பேருரைத்தால் பாமரருக்கு சிலிர்த்திடும் இப்போதும்!
அண்ணலெனும் பேரொலித்தால்
பாதகருக்கு வியர்த்திடும் எப்போதும்!
    -வரத.வசந்தராஜன்


சிவனுக்கு ரயில் இருக்கை

சிக்கு‌புக்கு ரயிலு ஒன்னு சீறி வருதுடோய்! -தம்பி
எக்கச்சக்க சாமி அதிலே ஏறி வருதுடோய்! 

கடவுளுங்க போகமட்டும் 
கச்சிதமா இருக்கை வெச்சி 
பயணத்துல களைப்புவந்தா 
பக்குவமா படுக்க வெச்சி       ‌(சிக்குபுக்கு)

சிவனோட குடும்பத்துக்கு 
பெட்டியொன்னு ஒதுக்கியாச்சு
டிடிஆரு பாத்துடாம 
'மூஞ்சுறை'யும் பதுக்கியாச்சு (சிக்குபுக்கு)

ஆதாரு காட்டாமலே 
அவதாரம் பத்துபேரு 
கூட்டிவந்த பெருமாளு 
கூட்டுக்குடும்ப கெத்துபாரு       (சிக்குபுக்கு)

பெண்களுக்கு தனியாக 
பெட்டியொன்னு இருக்குதுங்க
கணக்கில்லாத பெண்தெய்வம் 
படிவரைக்கும் நெறுக்குதுங்க       (சிக்குபுக்கு)

சூலம் வேலு வில் அம்பு 
வகைவகையா ஆயுதமாம்
தேடிப்பிடிச்சு லக்கேஜில்
ஏற்றிவர தாமதமாம்                         (சிக்குபுக்கு)

அப்பர்பெர்த்தில் அனுமாரு
மிடில்பெர்த்தில் பைரவரு 
சேவல் மயில் பாம்புவரை 
லோயர்பெர்த்தில் வெகுஜோரு     (சிக்குபுக்கு)

நவக்கிரக சாமிகளும் 
முன்பதிவு செஞ்சிருக்கு
நேருக்குநேர் பாத்துக்காம
சீட்டுகளை மாத்திருக்கு                  (சிக்குபுக்கு)
ர்

மருந்துகேட்டு மிரட்டும் அமெரிக்கா

காரம் தின்ன கோழியொன்னு கொக்கரிக்குது...
காட்டுநரி பயந்து போயி நமஸ்கரிக்குது...
அகலமாக நெஞ்சை இன்னும் விஸ்தரிக்குது-அதன் 
வீரமெல்லாம் கோழிக் குஞ்சை எச்சரிக்குது!

பாயும்புலி வேஷமெல்லாம் வெறும் பேச்சுதான்
பயம்மறைக்க பூசுகிற‌ முகப்பூச்சுதான்!
எலும்பும் தோலுமாயிருந்தா ஆளை மிரட்டுது
எக்குத்தப்பா ஆகுமுன்னா வாலை சுருட்டுது! 

கெழட்டுசிங்கம் கொழுப்பெடுத்து வாயைப் பொளக்குது
குருட்டுப்பூனை கருவாட்டை படி யளக்குது!
வறட்டுவீரம் பேசுகிற வானர பாணி- சும்மா
இருட்டுநேரம் உருட்டுகிற பழம் பெருச்சாளி!

வெளிப்படையா மிரட்டுதுங்க வெள்ளை மாளிகை
வேடிக்கைதான் பாக்குதுங்க ராமன் பாதுகை!
ஆர்எஸ்எஸ் இயக்குதா அமெரிக்கா இயக்குதா...?
அம்பத்தாறு இஞ்சுக்குள்ள தேசப்பற்று இருக்குதா?

கண்டனங்கள் இந்நேரம் முழங்கி இருக்கணும்
கண்டம்தாண்டி இந்தியாவின் குரல் ஒலிக்கணும்!
ஐநாவில் அமெரிக்கா கையக் கட்டணும்
அப்புறந்தான் விளக்கேத்தி கையத் கட்டணும்! 
      -வரத.வசந்தராஜன்

காவல்துறை அடாவடி

மன அழுத்தமா நெஞ்சழுத்தமா?
மனசு இருந்தா சொல்லுங்க...
கதறலைக் கேட்டும் இரக்கமில்லியா
காக்கிகள் மனசு கல்லுங்க...

அடா புடான்னு கூப்பிடுவாரு
தடா பொடான்னு மிரட்டிடுவாரு
ஆண்டவன் ரோட்டுல வந்தாலும்
அக்யூஸ்டை போல தடுத்திடுவாரு...

கண்ணுல மாட்டுனா சேதாரம்
காட்டச் சொல்லுவார் ஆதாரம்
உரிமையைக் கேட்டா வீண்வாதம்
அதுக்கும் போடுவார் அபராதம்!

கெட்ட வார்த்தைகள் அத்தனையும்
காவல்துறைக்கு அத்துப்படி
இப்படிப் பேச வழியிருக்கா
இபிகோவின் சட்டப்படி..?

தள்ளுவண்டி  அண்ணாச்சியும்
மல்லுக்கட்டணும்
தரைக்கடை ஆளுங்களும் மாமுல்வெட்டணும்
லாரி வேனு ஓட்டுநரும்
லஞ்சப்பணம் அள்ளி நீட்டணும்!

கள்ளநோட்டு கும்பலுக்கும்
கனிமவள திருடனுக்கும்
சலாம் போடுவார்- குனிஞ்சு
சலாம் போடுவார்!

பொதுசேவை செய்பவரை
போராட்டக் காரர்களை
போட்டுத் தள்ளுவார்- துணிஞ்சு
போட்டுத் தள்ளுவார்!

டாஸ்மாக் வாசலிலே
காவல் இருப்பார்
தடைகேட்டு போராடினால்
காலில் மிதிப்பார்!

உயர் அதிகாரிகளின்
ஏவல் முடிப்பார்
காய்கறிகள் வாங்கித்தந்து
சேவல் பிடிப்பார்!

ஏழைகள் என்றால் இளக்காரம்
எவன் கொடுத்தான் அதிகாரம்?
மருந்துக்கும் இல்லை மனசாட்சி
மாற்றிச் சொல்லுவார் பொய் சாட்சி!

திருப்பி அடித்தால் அவமானம்
தெரிந்து நடந்தால் தன்மானம்
கையில் எடுப்போம் லத்தியை
கற்று கொடுப்போம் புத்தியை!


காவி ராஜ்ஜியம்


நேத்துநடு ராத்திரியில் கெட்ட கனவுங்க
பாத்தகதை வேறெங்கயோ கேட்ட நினைவுங்க!

அமெரிக்காவின் கோவணத்தை வெளுத்து கொடுக்குறான் -அதன்
அழுக்குநிறம் காவியின்னு பெருமை பீத்துறான்!
தமிழ்நாடு வந்தப்பொருளை தடுத்து நிறுத்துறான்
தலையாட்டி சலாம்போட்டு தாவிக் குதிக்கிறான்!    
                                                             ‌ ‌ (நேத்துநடு)
வழிப்பறி திருடனுக்கு வழியை சொல்லுறான் வல்லூறூ பசியடங்க உயிரை கொல்லுறான்
காலமெல்லாம் அடிமையாக இருந்து பழகுறான்
காலணியில் தேன்தடவி விழுந்து தொழுகுறான்!
                                                             ‌ ‌ (நேத்துநடு)
நாடாளும் மன்றத்துக்கு கோடி ஒதுக்குறான்
நாட்டைக்கெடுத்த பேர்களுக்கு சிலையை வைக்குறான்
நாலஞ்சு லட்சத்துல கோட்டு தைக்குறான்
நிவாரணம் கேட்டாலே நீட்டி முழக்குறான்
                                                             ‌ ‌ (நேத்துநடு
பெத்தபுள்ள சோத்துத்தட்டை எட்டி உதைக்கிறான்
மத்தவங்க ஊட்டவந்தா முட்டி விரட்டுறான்
மனமிறங்கி உதவினாலும்  தடையை போடுறான் -அடச்சே
மனசாட்சி இல்லாம பெருமை‌ தேடுறான்!                                                         
                                                             ‌ (நேத்துநடு)
அடிமையாக பழகுனவன் முதுகு நிமிருமா?
அறிவுரைகள் கேட்டுநாய் வாலு நிமிருமா?
தேசப்பற்று பேசுனவன் வாய் மலருமா? -இல்ல
தேர்தலுக்கு மட்டும்தான் நினைவு திரும்புமா?
                                          -வரத.வசந்தராஜன்
           

கொரானா நிவாரணம்

அண்ணாத்தே சொன்னது எல்லாம் சரி
அவசியங் கேளுங்க வரிக்கு வரி
அன்னாடங் காய்ச்சிக்கு என்ன வழி? 
அதைச்சொல்லாம எதுக்கு இந்தக் கிழி!

பொல்லாத வைரஸை இல்லாம ஒழிக்க
செல்லாதே வெளியே பரவாம தடுக்க
லக்ஷ்மண ரேகையை போட்டாரு குறுக்கே
ராமனின் சேனைகள் நரம்பெல்லாம் புடைக்க
                                            (அண்ணாத்தே)
மூவேழு நாளுக்கு முடங்குது நாடு
தீவாக மாறணும் தனித்தனி வீடு
வாவென அழைக்குது வைரஸின் காடு
வருவழி அடைக்கணும் வீட்டுக்குள் ஓடு
                                              (அண்ணாத்தே)
கூட்டத்தில் பரவும் வாய்ப்புகள் பெற்று
சங்கிலித் தொடராக பெருகுது தொற்று
வளர்ந்த நாடுகள் அனுபவம் கற்று 
தனிமையில் இருப்பதே நம்தேசப் பற்று 
                                            (அண்ணாத்தே)
பின்னாலே போகுமாம் பொருளா தாரம் 
முன்னாலே ஒசந்ததா உண்டா ஆதாரம்
ஓடாத குதிரைக்கு சறுக்குமாம் ஓரம் 
ஆடாத காலுக்கு அமைஞ்சது நேரம்
                                           (அண்ணாத்தே)  
வேலைக்குப் போனாதான் வேளைக்குச் சோறு
வேதனை சொல்லாம வாழ்கின்ற பேரு
வீட்டுக்குள் அடைந்தால் என்னாகும் பாரு
வயிற்றுக்குச் சோறிட வழியுண்டா கூறு.   
                                                  (அண்ணாத்தே)
தாய்மார்பில் பாலின்றி இளையது கத்த
தலைச்சனும் கேக்குது ஏன் என்னை பெத்த?
வாழ்வுக்கு வழிசொல்லா வார்த்தைகள் சொத்தை
வெறும்வாயால் பந்தலைப் போடுற வித்தை
                                                  (அண்ணாத்தே)

கார்ப்பரேட் மானிய கரன்சியை உருவி 
காய்ப்புகள் காய்த்த கரங்களைத் தழுவி
உணவுக்கும் மருந்துக்கும் சிறுதொகை உதவி
கடனுக்கும் குழுவுக்கும் விடுப்பினை அறிவி
                                                     (அண்ணாத்தே)

வரத.வசந்தராஜன்

Sunday, July 5, 2020

தனியார் மயம்

முச்சந்தியில் கடைபரப்பி கூவி- நாட்டை 
மூட்டைகட்டி விக்குதுங்க காவி!
திருடன்கையில் தந்தோமே சாவி -இனி 
ஆவதென்ன அழுதுபுலம்பி கேவி!

தனியாரு மடியில தற்சார்பை தேடுது
முதலாளி நிழலுல முட்டிரெண்டும் தேயுது
போகாத ஊருக்கு வழிதேடி நிக்குது
ஆகாத கதைசொல்லி பொதுத்துறையை விக்குது...

அரசுத்துறையில் லஞ்சம் ஊழல் தொல்லையாம்
அதுவெல்லாம் தனியாரில் இல்லையாம்
தனியாரில் தில்லுமுல்லு நடக்குதுங்க- இந்த 
தற்குறிகள் தெரியாம பேசுதுங்க! 

பரதேசிக் கோலமா நாடு கிடக்குது- அரசு
பட்டுசட்டைக் காரனுக்கு பட்டன் தைக்குது
பிச்சைக்காரன் தட்டுலயும் பங்கு கேக்குது
பணக்கார கூட்டத்துக்கு பந்தி வைக்குது! 

மக்களாட்சி என்பதெல்லாம் பேருக்கு தாங்க- இங்கு
மகுடமெல்லாம் ஏய்ச்சுபொழைக்கும் ஆளுக்கு தாங்க?
வாயைப்பொத்தி இருப்பதால வாழ்க்கை மாறுமா? -நாம
வர்க்கமாக சேராம வசந்தம் வீசுமா?

கண்ணெதிரே கொடுமை கண்டு சினப்படு தோழா
கயவர்களை தோலுரிக்க புறப்படு தோழா!
          -வரத.வசந்தராஜன்

Saturday, July 4, 2020

மலக்குழி மரணம்

ஏழைங்க செத்தா கணக்கில்லையா? -அட 
எவனுக்கும் காதுல கேக்கலயா? 
பாவிங்க வாழும் உலகத்துல -பஞ்ச 
பரம்பரை வாழ வழியில்லையா? 

மலக்குழி எங்களின் சவக்குழியாய்
மாறுது எத்தனை தலைமுறையாய்? 
சாதியம் என்கிற புதைகுழியால் 
நாறுது நாடே சாக்கடையாய்!

கடலின் அடியில் கிடப்பதையும்
கண்டு பிடிக்க கருவிகளா?
மண்ணில் புதைந்த வளங்களையும் 
தோண்டி எடுக்க வருவீகளா?

சந்திர செவ்வாய் கோளுக்கும் 
எந்திரம் அனுப்புதல் சாதனையா?
சாக்கடை அடைப்பை கருவிகளால்
போக்கிட அறிவியல் போதலையா?

திங்குற கையால் அள்ளுகிறோம்
தலைவிதி எண்ணி வெம்புகிறோம்
சாதியம் பேசும் மனிதர்களை 
சாக்கடைப் புழுவாய் எண்ணுகிறோம்!

கழிப்பறை எங்களின் கருவறையாய்
கடவுளை காண்கிறோம் மலவடிவாய்
தூணிலும் துரும்பிலும் இருப்பானா?
தூய்மைப் பணியை வெறுப்பானா?
            
                                         -வரத.வசந்தராஜன்

Thursday, July 2, 2020

கிணற்றுத் தவளைகள்

பார்வைக்கு அப்பாலும் 
பிரபஞ்சம் உண்டென்று 
போர்வைக்குள் கிடப்போர்க்கு யார் சொல்லுவார்? 
போர்வைக்கோல் மேலேறி பிறைநிலா 
தொடுமென்று 
வேர்வைக்கும் எண்ணத்தை யார் வெல்லுவார்?  

முதுகுக்கு பின்னாலே நடப்பதை அறியாமல் 
கழுகுக்கு இரையாகும் கோழிக்குஞ்சே!
வாழ்வுக்கு வழிகாட்ட வாவென அழைத்தாலும் 
வீம்புக்கு வெளிச்சென்றால் யார் பேணுவார்? 

நல்லதை பொறுக்காமல் நலம்நாடி கிடக்காமல்
அல்லதை அழகென்று அதைத்தேடி அடைவோரும்
பொல்லதை உணராமல் பொய்யாலே மயக்கிட
வல்லதை சேர்வோரும் பின் நாணுவார்?

பட்டத்தின் மீதேறி  பறக்கிற ஆசையில் 
விட்டத்தில் தானேறி தேடுவார் நூலேணி- ஒரு
கட்டத்தில் பித்தேறி கண்டதை பேசிச்சிறு 
வட்டத்தில் பிடுங்குவார் தேவையில் லாஆணி!

விண்ணறிவை அறிந்தவனை விஞ்ஞானி எனக்கொள்வோம்
மண்ணறிவை உணர்ந்தவனை விவசாயி எனச்சொல்வோம்
தன்னறிவை அளந்தவனை தற்பெருமை எனத்தள்ளி 
நுண்ணறிவை உடையவனை நுட்பத்தால் நாமறிவோம்! 

-வரத.வசந்தராஜன்

Wednesday, July 1, 2020

வயல்வெளி காதல்

பெண்
ஆத்துமீனை பாக்கும்போது அடிமனசில் நூறுஆசை
சேத்துமடை கெளுத்தியாட்டம் குத்துகிற மாமன்மீசை
சோத்துப்பானை கரியைப்போல சொக்கும்நெறம் அமாவாசை
நாத்துவீச வாரீகளா நடவுமறந்து நானும்பேச?

ஆண்: 

வரப்புமேல நீநடந்தா வழுக்குதடி என் மனசு
செருப்புமறந்த பாதத்துல சிணுங்குதடி பூங்கொலுசு
கருத்தநெறம் மாறட்டுமே செவத்தபுள்ள நீயுரசு
கழுத்துமணி நுனியிலதான் கட்டழகே உன்மவுசு!

பெண்:
வெவரமான ஆளுநானு விவகாரம் பேசாதீக
விலைபேசி வம்பைவாங்கி வில்லங்கம் சேக்காதீக
தாலிகட்டும் முன்னாடியே கேலிபேச கூடாதுங்க
வேலிபோட்டு விரட்டினாலும் வெள்ளாடு ஓடாதுங்க! 

ஆண்:
அத்தைமக முறையிருக்கு ஆனாலும் பயமிருக்கு
ஆடிப்பட்டம் வெளஞ்சிருக்கு  தைபொறந்தா வழியிருக்கு
மத்தாட்டம் கடையத்தானா மவராசி விழியிருக்கு 
பித்தாட்டம் அலையுறேன்டி போகலயே மனக்கிறுக்கு!

பெண்:
பருத்தியெடுக்கும் வயலுக்குள்ள வெடிக்குதய்யா புரளியொன்னு
பனைமட்டை கருக்கைப்போல அறுக்குதய்யா ஊருகண்ணு
நெனவுதெரிஞ்ச நாள்முதலா உனக்காக வாழும்பொண்ணு
கனவுகண்டு காத்துகெடக்கேன் கைபிடிக்க வரணுமின்னு!

ஆண்:
விண்ணைவிட்டு வெள்ளிநிலா மறைஞ்சுபோகும் ஆனாலும்
தென்னைபட்டு கூடுவிட்டு கிளிபறந்து போனாலும் 
உன்னைவிட்டு நான்பிரிஞ்சு உசிருவளர்க்க மாட்டேன்டி
தண்ணிவிட்டு மீனுவாழ்ந்தா தங்கமேநீ காட்டேன்டி! 

இருவரும்: 
விதைநெல்லு சாட்சிவெச்சு வெத்தலையும் பாக்குவெச்சு 
ஊரெல்லாம் கூட்டிவெச்சு ஒருநாளு பாத்துவெச்சு
நீயும்நானும் சேரப்போறோம் நெனச்சபடி வாழப்போறோம்
பாயும்தல காணிபோல பிரியாம இருக்கப்போறோம்!
          வரத.வசந்தராஜன்