Friday, July 15, 2022

உயிர்

உடலும் வீழும் உயிரும் மாயம் 

உள்ளம் மட்டும் ஏற்காது!

ஊரும் பதறும் உறவும் கதறும் 

இறவா திருக்கும் நிலையேது?


பெட்டிப் பணத்தை 

கட்டி அணைத்தும்

கெட்டி இல்லை உயிரிங்கே!


இளமை மூப்பு 

எதுதான் சொல்லும் 

இறந்து படுக்கும் நாளெங்கே? 


மலமும் சலமும்

வாரும் வழிக்கும் 

நிலையில் ஆண்டுகள் கடக்கின்றார்! 


திடமாய் திரிந்த 

மனிதர் கூட 

திடுமென மரித்துக் கிடக்கின்றார்!


தடுக்கி விழுந்தே 

இறந்தவருண்டு

தலையடி பட்டும் தப்பிப்பார்!


குண்டைத் தாங்கி 

வாழ்ந்தவர் கூட 

குண்டூசி குத்தி மரணிப்பார்! 


எங்கோ ஓருயிர் 

மடிந்தது கேட்டால் 

முடிந்தது விதியெனக் கூறிடுவார்! 


இறந்தவர் தமக்கு 

உரியவர் என்றால் 

எமனையும் வெட்டிக் கூறிடுவார்!  


மரணம் ஏற்க முடியாமல் 

மறுமை என்பதை மனம் ஏற்கும்! 

சரணம் இறையெனக் கிடந்தாலும் 

கிழமை பார்த்தா உயிர் போகும்?


உயிரின் இருப்பு எதிலென்றால் 

துடிப்பில் என்பதே சரியாகும்! 

இறப்பு எதிலே இருக்கிறதென்றால் 

பிறப்பில் என்பதே பதிலாகும்!


-வரத.வசந்தராஜன்

  நன்னிலம்

ஹிப் ஹாப் வடிவில் ஒரு முயற்சி

 நண்பா....

நீ வா வீதிக்கு

நாங்கள் சொல்லும்‌ தேதிக்கு!

சட்டம் இங்கே யாருக்கு?- எனச் 

கேட்கும் மறியல் போருக்கு!


பதிவுகள் மட்டும் போதுமா?-நீ களத்துக்கு வந்தால் பாவமா? 

எதிர்த்து கேள்வி கேட்காமல் 

சட்டையை பிடித்துக் குலுக்காமல் 

பதில் தருமா? மனம் வருமா? 

மயிலே மயிலே என்றால் 

இறகிடுமா? சரிப்படுமா? 


இதுவரை இங்கே இருப்பது- அதில் எதுதான் தானாய் கிடைத்தது?

மூடிய கதவுகள் தெறிக்கும்-உன்

முஷ்டியில்  மோது பிளக்கும்

மடை திறக்கும்! விடை பிறக்கும்!

விழித்தது இளையோர் கூட்டம்

இனிதூங்குமா? புவிதாங்குமா?


இனியும் என்ன யோசனை?- அட 

எத்தனை நாளிந்த வேதனை?

ஒரு சிலருக்கு நாடா?- நாம் 

ஒன்றாய் இணைவோம் வாடா! 

படை வெல்லும்! பகை கொல்லும்!

மேடுகள் பள்ளம் நிரப்ப

எடு ஆயுதம்! அறிவாயுதம்?


எல்லாம் இறைவன் விதித்தது- என 

எவன்தான் சொல்லிக் கொடுத்தது?

வேதங்கள் சொல்வது மூடம்- நாம் 

படித்தோம் இயங்கியல் பாடம்!

வரும் நேரம்! நிலைமாறும்! 

நெருக்கடி இன்னும் முற்றும் 

போர் மூளும்! பொதுவாகும்! 


-வரத.வசந்தராஜன்

ராமர் கோயில்

 ராமனுக்கு கோயில்கட்டும் இந்தநாட்டுல 

ராத்தங்க குடிசையில்லை சனங்க ரோட்டுல!

லெட்சுமண சீதையோடு அடர்ந்த காட்டுல -ராமன்

வனவாசம் போனகதை கம்பன் பாட்டுல!


அடிக்கல்லு நாட்டுறாங்கே ஆடம்பரமா

அனுமன்சேனை ஆட்டுதடா ஆடுடாராமா!

கடவுளென கையெடுத்துக் கும்பிடலாமா

காவிக்கூட்ட பக்தியினை நம்பிடலாமா?


சத்திரிய வம்சத்தில் வந்த ராமனை

சங்கிராமன் ஆக்குதடா ஆரியசேனை

கார்ப்பரேட்டாய் மேயவந்த மாரீசமானை -விட்டு

கருவாட்டுப் பாத்திரத்தை காக்கிற பூனை!


அமைதியினைத் தருவதுதான் ஆன்மீகமே

ஆயுதத்தைத் தூக்குவது அறிவீனமே

அரியணையை விட்டுத்தந்த அவதாரமே- அதை

அரசியல் கருவியாக்கல் அவமானமே! 


அகிலமெல்லாம் ஆண்டவனின் இருப்பிடம்

அயோத்தியில் மட்டுமா பிறப்பிடம்?

சீதையவள் கற்புரைத்தாள் நெருப்பிடம்- உங்கள்

சீராமன் ஆட்சியின்றும் செருப்பிடம்! 


பரதனுக்கு நாடுதந்து காடுசென்றவன்

பாபருக்கு மட்டுமென்ன மறுத்திடுவானா?

குகனிடத்தில் தேனும்மீனும் வாங்கித்தின்றவன் -அவன்

குலத்தவன் படையலிட்டால் வெறுத்திடுவானா? 


ரதங்களின் யாத்திரை முடியட்டும் -இனி 

நிஜங்களின் நித்திரை கலையட்டும்!

மனங்களில் மதவெறி ஒழியட்டும் -இனி 

சனங்களில் சமத்துவம் பெருகட்டும்!


வரத.வசந்தராஜன்

நன்னிலம்

விவசாயி படும் பாடு

பாடுபட்டா பலன் கிடைக்கும் 

பெரியவங்க சொன்னாங்க- நான் படுற பாட்டை பாத்துப்புட்டு

வாயடைச்சு நின்னாங்க...


நட்ட பயிரு வெளயலயே 

நாளுக்கு நாள் காயுது; தினம் சாயுது -தப்பி

வெளஞ்சதுக்கும் 

விலையில்லையே

விதியை எண்ணி நோகுது; சனம் சாகுது!

             ‌‌                                 (பாடு பட்டா)

புண்ணாக்கு போதலன்னு 

காளை மாடு முட்டுது; கொம்பு குத்துது -ஒரு 

புடவை வாங்க வக்கில்லன்னு 

பொஞ்சாதி திட்டுது! சும்மா கத்துது!

             ‌‌                                 (பாடு பட்டா)

வாரம் வாரம் வாசலுல 

குழுவு பொண்டுக கூடுது; சத்தம் போடுது- பணம் 

வாங்கும் போது இனிச்சுதானு 

நாக்கைப் புடுங்க கேக்குது; ஊர் பாக்குது! 

             ‌‌                                 (பாடு பட்டா)

சேட்டு கடை தாண்டும்போது 

சின்னப் பொண்ணு ஞாபகம்; கடை போனதும்- அவ 

தோட்டுத் தொங்கல் வட்டி கேட்டு 

மீட்டுத் தர தாமதம்; இன்னும் தாமதம்! 

             ‌‌                                 (பாடு பட்டா)

வய வரப்பு களத்துலயே

எங்க பொழப்பு முடியுது; புள்ள தொடருது- அட 

எந்தக் காலம் சூரியனும் 

ஏழை வீட்டில் விடியுது? ;ஒளி படருது?.

             ‌‌                                 (பாடு பட்டா)

-வரத.வசந்தராஜன்

  நன்னிலம்.

மே தினம்

 ஆண்டான் அடிமை பேதம் ஒழிக்க 

செங்கொடி ஏந்தி சென்றோ மே!

ஆனைகள் சேனைகள் ஆயிரம் இருந்தும் 

அதனையும் எதிர்த்து வென்றோ மே!


சிகாகோ நகர வீதிகள் ஜெயித்த 

உரிமைகள்  இன்னும் தொடர்ந்திடு மே!

சிந்தனை மேலும் மேலும் வளரும் 

உலகெலாம் செங்கொடி படர்ந்திடு மே!


கட்டித் தங்கம் தராத பலனை 

கட்டிய சங்கம் தந்திடு மே!

கூட்டாய் சேர்ந்து குரல் கொடுத்தால் 

கேட்டது கைகளில் வந்திடு மே!


தோழா... தோழா... தோளை உயர்த்து 

வானம் நமக்கு வசப்படு மே! 

துணிந்தால் போதும் துப்பாக்கி வீழும் 

தோட்டாக்கள் கூட பயப்படு மே!


பீரங்கி பலம்கொண்ட படைகள் கூட 

செந்தொண்டர் படைமுன் தகர்ந்திடு மே! 

கொடியை ஏந்தி கோஷங்கள் முழங்கி 

வெற்றியை நோக்கி நகர்ந்திடு மே! 


உரிமைக் குரலை உரத்து முழங்கு 

கோட்டைகள் எல்லாம் பொடிபடு மே!

உழைக்கும் வர்க்கம்  ஒன்று திரண்டால் 

உலகம் நம்கா லடிபடு மே!


உண்மை நிலை உணர வேண்டும் 

உழைக்கும் வர்க்க மே! 

உலக மெல்லாம் திரும்ப வேண்டும் 

இடது பக்க மே!


குட்டக் குட்டக் குனிந்த முதுகும்

நிமிரப் பார்க்கு மே!

பட்ட பின்னே புத்தி வரும் 

பூமி சிவக்கு மே!


சோஷலிஷ சமுதாயம் லட்சிய மே- அதை

சுவைத்திடும் நாள்வரும் நிச்சய மே!

மாற்றம் என்பது அவசியமே-அதை 

மாற்றப் போவது மார்க்சிய மே! 

                           -வரத. வசந்தராஜன் 2017