Sunday, August 30, 2020

மநுவைத் துளைக்கணும்

 ஏய்ச்சு பொழைச்சவன் பாதி 

ஏமாந்து போனவன் மீதி-இதில் 

என்ன மசிருக்கு சாதி 

இன்னும் வாழணுமா மனுநீதி? 


கஞ்சிக்கு வழியில்லை  

கால்முழம் துணியில்லை

அஞ்சுக்கும் பத்துக்கும் 

அல்லாடும் நெலைமையடா...


ஆனாலும் குதிக்கிற 

அரிவாளைத் தூக்குற‌

ஆண்டாண்டு காலமாய் 

மாறாத கொடுமையடா...        (ஏய்ச்சு) 


அங்காடி அரிசியில் 

அன்னாடம் பொழைக்கிற

அரைக்காணி நெலத்துல

ஒன்னாக உழைக்கிற 


ஆனாலும் குதிக்குற

அரிவாளைத் தூக்குற

என்சாதி ஒசத்தின்னு 

எகத்தாளம் பேசுற                  (ஏய்ச்சு) 


ஆள்கிற பரம்பரை

அரசனின் தலைமுறை 

எனச்சொல்லி திரிகிற‌

ஏமாளி கூட்டமடா...


ஆள்பவன் சதிகளில்

அவன்கேட்ட வரிகளில் 

மாண்டவர் எத்தனையோ? -அட

ஆண்டதில் சாதனையோ?     (ஏய்ச்சு)


அரசனின் சாதியில் 

அத்தனைப் பேருக்கும் 

அரியணை கிடையாதடா -உனக்கு

அதுகூடப் புரியாதடா!              


அந்தப் புரங்களில்

அடைபட்ட பெண்களில்

எத்தனை சாதிகளோ- வாரிசு

எந்தெந்த சாதியிலோ?            (ஏய்ச்சு)


அரிசியை விளைத்ததில்

ஆடையைக் கொடுத்ததில்

ஆயிரம் சாதியடா- நீயும்  

அறியாத சேதியடா!


தீட்டென ஒதுக்கிட்டால் 

தீண்டாமை பார்த்திட்டால் 

அம்மணக் குன்டிகளாய் -பசியில்

அலைஞ்சு சாகணுன்டா!     (ஏய்ச்சு)


சாதிய கத்திக்கு

சிந்திய ரத்தத்தின் 

சரித்திரம் மாறட்டுன்டா- நமது 

சந்ததி வாழட்டுன்டா!


அணுவையும் துளைக்கிற

அறிவியல் யுகம் இது 

மநுவையும் துளைக்கணுன்டா- அட

மனிதத்தை வளர்க்கணுன்டா!


-வரத.வசந்தராஜன்

நன்னிலம்.


No comments:

Post a Comment