ஆட்டுக்கொம்பில்
கட்டப்பட்ட
பசுந்தழையென
கண்ணுக்கு முன்
ஆடுகிறது
சக மனிதர்களின் மரணம்!
அங்கொன்று
இங்கொன்று என்பதல்ல
எங்கெங்கும்
ஊடுருவுகிறது
உயிர்க்கொல்லி கிருமி!
மானுடம் சமைத்த
மாளிகையென்றோ
மகுடங்கள் அமைந்த
மந்திரியென்றோ
பேதமின்றி இழுக்கிறது
சவக்குழிக்குள் கொரானோ!
கூடுவிட்டு விழுந்த
குஞ்சுக்குருவிக்காகவே
பதைக்கிற மனம்
கண்முன்னே விரியும்
கொத்துக் கொத்தான
மரணங்களால்
குலைநடுங்குகிறது!
பூமி போதாமல்
செவ்வாயை வளைக்க
செயற்கைக்கோள்
ஏவிய மானிடம்
வாய்பிளந்து நிற்கிறது
வால் நட்சத்திரம்
விழுந்தாவது
கொரானா அழியுமாவென
..
வளரும் நாட்டின்
வரிசையில் நிற்கையில்
கால் பிடித்து இழுக்கிறது
படுக்கையின்றி கதறும்
பரிதாபக் குரல்கள்!
ஆக்ஸிஜன் தட்டுப்பாடென
தகவல் கிடைத்து
மூச்சுமுட்டுகிறது
கிருமி தாக்காமலே...
தடுப்பூசி போட்டேனும்
மரணத்தை
தள்ளிப்போட
நினைத்தவர்கள்
தடுப்பூசி
இல்லையென்றதும்
தள்ளாடிப் போகிறார்கள்...
படைப்புக்கும்
அழிவுக்கும் நடுவில்
பரிதவிக்கிற யாரும்
காக்கும் கடவுளை
கருதுவதாயில்லை...
தகரத் தடுப்புகளுக்கு
கஜானாவின்
முடிச்சவிழ்த்தவர்கள்
செவிலியர்களுக்கு
சுருக்கு போடுகிறார்கள்
பணிச்சுமையால்...
எந்திரங்களாகவே
பார்க்கப்படும்
எங்களுக்கு
ஊக்கத்தொகையுமில்லை...
எங்கள் வலியுணரும்
உணர்வுகளுமில்லை...
கடமையை செய்
பலனை எதிர்பாராதே
என்றவர்கள்
கடமையே செய்யாமல்
பலன் பெறுகிறவர்கள்!
மருத்துவமனை
வராந்தாக்கள்
நாங்கள் ஓடி ஓடியே
தேய்ந்து போயின...
புலம்பித் தீர்க்கவும்
ஓய்வில்லை...
புலம்பல் கேட்கவும்
ஆளில்லை!
No comments:
Post a Comment