Saturday, May 8, 2021

பருவநிலை

வானிலை அறிவிப்பைக் 
கேலிசெய்ய 
ஒத்திகை பார்க்கிறது 
பெய்யெனப் பெய்யா மழை! 

காக்காய்க்கும் நரிக்கும் 
கல்யாணம் கட்டி 
நடக்காத கதையாக 
பாட்டி சொன்ன 
மழைக்கால வெயில் 
இளம்பாம்புகள் 
இணையும் காட்சியாய் 
அவ்வப்போது காண 
முடிகிறது.

மழை வராதென்ற 
மரபின் நம்பிக்கையை 
நமத்துப் போக 
செய்கிறது 
மொட்டை மாடி வடகம்! 

மும்மாரி பெய்த 
மழைக்கு 
முளைப்பாரி கட்டி 
அனுமதி கொடுத்தவர்கள் 
மழைநீர் சேகரிப்புத் 
திட்டத்துக்கு 
மனு கொடுக்கிறார்கள்! 

ஆடிப் பட்டம் 
தேடி விதைக்க 
ஆற்றில் எங்கே 
தண்ணீர்? 

ஆழ்துளை கிணற்றுக்கு 
ஆகும் செலவில் 
ஐந்து பெண்ணுக்கும் 
திருமணம் 
செய்யலாமென்ற தப்புக்கணக்கில் 
தரிசாய் கிடக்கிறது 
பெண்ணும் மண்ணும்...

வானம் பார்த்த 
பூமியொன்று 
தனியாக 
இல்லை...

அலையடங்குமென 
பாட்டி சொன்னாளே 
அந்த நாட்களிலும் 
கொந்தளிக்கிறது 
கடல். 

வண்டல் மண்ணும் 
பாறையாக பிளக்கிறது
மணலில் கூட 
பாசி படர்கிறது
மேகங்களின் தகிப்பில் 
ஆகாய விமானங்களில் 
தெறிப்பு கூட வரலாம்!
யாருக்குத் தெரியும் 
பனிமலைகள் நமக்கு 
பாதாள குழியாகலாம்! 

அதிகபட்சம் 
பேரிடர்களுக்கு 
பெயரிடுவதைத் தவிர 
பருவநிலை மாற்றத்துக்கு
என்ன கிழிக்கும் 
முதலாளியப் போட்டியில் 
முண்டுகிற நாடுகள்! 

மூன்றாம் உலக நாடுகளில் 
குப்பை நிரப்பும் 
முதல்நிலை 
நாடுகளுக்கு 
புரிவதேயில்லை 
பூமிக்கெல்லாம் 
வானம் ஒன்றுதான்...

கரையோரத்தில் தான் 
சுனாமி வருமென 
கைகட்டி இருந்தால் 
காலுக்கடியில் 
பூமி பிளக்கலாம் 
எச்சரிக்கை!

No comments:

Post a Comment