ராமனுக்கு கோயில்கட்டும் இந்தநாட்டுல
ராத்தங்க குடிசையில்லை சனங்க ரோட்டுல!
லெட்சுமண சீதையோடு அடர்ந்த காட்டுல -ராமன்
வனவாசம் போனகதை கம்பன் பாட்டுல!
அடிக்கல்லு நாட்டுறாங்கே ஆடம்பரமா
அனுமன்சேனை ஆட்டுதடா ஆடுடாராமா!
கடவுளென கையெடுத்துக் கும்பிடலாமா
காவிக்கூட்ட பக்தியினை நம்பிடலாமா?
சத்திரிய வம்சத்தில் வந்த ராமனை
சங்கிராமன் ஆக்குதடா ஆரியசேனை
கார்ப்பரேட்டாய் மேயவந்த மாரீசமானை -விட்டு
கருவாட்டுப் பாத்திரத்தை காக்கிற பூனை!
அமைதியினைத் தருவதுதான் ஆன்மீகமே
ஆயுதத்தைத் தூக்குவது அறிவீனமே
அரியணையை விட்டுத்தந்த அவதாரமே- அதை
அரசியல் கருவியாக்கல் அவமானமே!
அகிலமெல்லாம் ஆண்டவனின் இருப்பிடம்
அயோத்தியில் மட்டுமா பிறப்பிடம்?
சீதையவள் கற்புரைத்தாள் நெருப்பிடம்- உங்கள்
சீராமன் ஆட்சியின்றும் செருப்பிடம்!
பரதனுக்கு நாடுதந்து காடுசென்றவன்
பாபருக்கு மட்டுமென்ன மறுத்திடுவானா?
குகனிடத்தில் தேனும்மீனும் வாங்கித்தின்றவன் -அவன்
குலத்தவன் படையலிட்டால் வெறுத்திடுவானா?
ரதங்களின் யாத்திரை முடியட்டும் -இனி
நிஜங்களின் நித்திரை கலையட்டும்!
மனங்களில் மதவெறி ஒழியட்டும் -இனி
சனங்களில் சமத்துவம் பெருகட்டும்!
வரத.வசந்தராஜன்
நன்னிலம்
No comments:
Post a Comment