குப்பை கூலமாய் வாழ்க்கை கிடக்குது
கூட்டிப் பெருக்க ஒரு ஆளில்ல
ஊரு குப்பையை நாங்க சுமக்குறோம்
ஒத்தாசைக்கு ஒரு தோளில்லே!
தலைமுறையா இந்தத் தொழில்முறைதான்
தலைவிதியாகக் கிடக்குது?-பணி
நிரந்தரமாக்கி நீதியைக் காக்க
எதுதான் உங்களைத் தடுக்குது?.(குப்பை)
மூக்கை பொத்துறான் மூஞ்சு சுழிக்கிறான்
நாத்தம் சகிக்காம நகர்ந்து போகுறான்-அந்த
வீச்சத்துக்குள்ள வாழ்ந்து மடியுறோம்
சூட்சுமம் புரியாம வழக்கு போடுறான்!
சாமி அழுக்கையே பாலில் கழுவுறான்
அபிஷேகமுன்னு சொல்லி வைக்கிறான்
ஊரு அழுக்கையே கழுவும் எங்களை
ஊரைவிட்டு ஏன் தள்ளி வைக்குறான்?
(குப்பை)
கொள்ளை நோய்களும் வந்த போதிலும்
கொஞ்சமும் நாங்க ஓயவில்லை
ஊரடங்குல நாடு முடங்கியும்
உசிருக்குப் பயந்து ஒதுங்கவில்ல
பேய்மழைக் காலமும் பேரிடர் நேரமும்
தாயெனக் காத்தது யாரடா?
வாயைத் திறந்து உரிமைகள் கேட்டால்
நாயென விரட்டுதல் ஏனடா?
(குப்பை)
பட்டுக்குஞ்சமுன்னு பேரு வெச்சதா
பெருமை பீத்துற அரசாட்சி
துடைப்பக் கட்டையா தூக்கி வீசுதே
சமூக நீதியெல்லாம் வெறும்பேச்சு!
தேங்கி கிடக்கிற சாக்கடை அடைப்பை
சவுக்குக் குச்சிதான் எடுக்குது?
சவுக்கை எடுக்கிற காலம் வருவதை
சரித்திரம் சொல்லிக் கொடுக்குது! (குப்பை)
No comments:
Post a Comment