உசிரா இருக்கும் வரைக்கும்
அருமை தெரியவில்லை- அவர்
உருவம் கண்ணுக் குள்ள
இன்னும் மறைய வில்லை!
விலை யென்ன கேட்காம
வாங்கிக் கொடுத்த அப்பா- அவர்
வேதனையைத் தெரிஞ்ச அம்மா
என்னை அதட்டி வெப்பா!
தீவாளி பொங்கலுக்கு துணியெடுக்கப் போனாலும்
தெனக்கூலி தீர்ந்துபோயி வட்டிவாங்கி வந்தாலும்
ஆளுக்கு ரெண்டுசட்டை
எடுத்துக் கொடுத்த அப்பா-அவர்
மேலுக்குப் போட மட்டும்
பத்து வருஷ ஜிப்பா! (உசிரா)
எண்ணெய்தேச்சு குளிக்கவைக்க
என்னைபாடு படுத்துவாரு
கண்ணில் சீக்கா விழுந்ததுக்கு கலங்கி அவரு தவிப்பாரு
சைக்கிளு பாரில்சின்ன
சீட்டு வெச்ச அப்பா - என்
செருப்பில் பதிஞ்ச முள்ளை
வாயில் கடிச்ச அப்பா! (உசிரா)
கறிசோறு சமைச்சாலும்
எலும்பு மட்டும் கடிச்சிகிட்டு
கையால நெறடிப்பாத்து
கறி எடுத்து நீட்டுவாரு
தொண்டைக்கு போன முள்ளை
தோண்டி எடுத்த அப்பா -எனக்கு
நண்டுகால் கடிக்கும்போது
எச்சில் பட்டா தப்பா! (உசிரா)
திருவிழா கூட்டத்துல நான்தொலைஞ்சு போவேன்னு
திண்பண்டம் வாங்கித்தந்து
தோளில்தூக்கி வெப்பாரு
கோபுரம் என்னைவிட
ஒசரம் கம்மியப்பா -அந்த
கோயிலு சாமிதானே
என்னை பெத்த அப்பா! (உசிரா)
-வரத.வசந்தராஜன்
நன்னிலம்.
No comments:
Post a Comment